நாதாந்த சக்தியாகவும் குண்டலினி இயக்கமாகவும் இயங்குபவள் நயினை நாகபூசணி. சக்திக்குரிய பேரியல்புகளோடும் ஆத்மீகத்தின் தூயஇயல்போடும் மூலத்தானத்திலே ஐந்தலை நாகத்தின் பின்னணியிலேயே வீற்றிருக்கும் திருவருட் பொலிவிலே தம்மை வசமிழக்காதோர் இலர். வாழ்க்கை என்பது திருவருளினாலேயே மேம்பாடும் சிறப்பும் பெறவல்லது. சீரும் சிறப்பும் பொருந்திய வாழ்வை அளிக்கவல்ல தெய்வீக மாண்பு அன்னை ஸ்ரீ நாகபூசணிக்கு உண்டு. பிறவிகளின் விகற்பங்களையெல்லாம் தனது இயக்க சக்தியின் மூலம் வெளியுலகுக்கு வெளிப்படுத்தி மனித மனங்களை தன்னடிக்கீர்த்துத் திருவருள் பெருக்கும் வல்லமையாக மிளிருக்கின்றாள் நயினை நாகபூசணி. பிரபஞ்சத்தின் இயக்கமே பாம்பினது தலையிலே நிகழுவதாகக் கருதும் இந்து தத்துவத்தின் விஞ்ஞான நிலைப்பட்ட கருத்தினை ஊனக் கண்களினால் மனிதர்கள் கண்டுணரும் வகையிலே இயக்கபூர்வமான காட்சியினையும் நிகழ்வுகளையும் நடத்திக்காட்டும் நாயகியாக நாக பரமேஸ்வரி விளங்குகிறாள் என்பது அவளது பெருமையின் அம்சமல்லவா?
கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்களின் “நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன்” நூலிலிருந்து